புதுவை / விழுப்புரத்தில் மாறி வருகிறதா வடகிழக்கு பருவமழை ???

COMK Analysis Tamil Update
Reading Time: 2 minutes

தமிழகத்தை பொறுத்தவரை ஜனவரி பிப்ரவரி மாதங்களில் வானிலையில் பெரிய மாற்றம் ஏற்படுவதில்லை. பிப்ரவரி முடிவில் அல்லது மார்ச் மாத துவக்கத்தில் காற்றின் திசையில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக பகுதிகளில் வெப்ப சலன மழை பெய்ய வாய்ப்பு அதிகாரிக்கும். எனினும் இந்த அமைதியான வானிலை தருணங்களில் கடந்த சில ஆண்டுகளாக புள்ளி விவரங்களின் அடிப்படையில் நாம் வானிலை பதிவு செய்து வந்துள்ளோம்.

அந்த வரிசையில் தற்போது வட கடலோர பகுதிகளில் நீண்ட கால மழை அளவில் ஏதேனும் மாறுதல்கள் உள்ளதா என அறியும் நோக்கில் வடகிழக்கு பருவமழை அளவை 1901 முதல் 2019 வரை தமிழகத்தின் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை பிரதேசத்தின் மழை அளவை கொண்டு இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. காரைக்கால் பகுதியின் மழை பதிவுகள் முற்றிலும் இல்லாத காரணத்தால் இந்த ஆய்வில் அந்த பகுதியை சேர்க்க இயலாமல் போனது. இந்த ஆய்வின் முக்கிய சாராம்சம்

  • பரவலாக கடலோர பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையின் அளவு கடந்த நூற்றாண்டை விட தற்போது அதிகரித்து உள்ளது
  • வடகிழக்கு பருவமழையை பொறுத்த வரை (Decadal Oscillation) அலைவு மிக நன்றாக தெரிகிறது. இந்த அலைவின் காரணமாக வடகிழக்கு பருவமழையின் சராசரி மழை அளவு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மேலும் கீழுமாக மாறுகிறது
  • 2001 முதல் 2010ஆம் ஆண்டு வரையிலான சராசரி கடந்த 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கால கட்டத்தில் அதிகம் பதிவான மழை அளவு ஆகும்.

இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு நமது கவனத்தை அதிகமாக ஈர்க்கிறது. விழுப்புரம், புதுவை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களின் மழை அளவு கடந்த நூற்றாண்டில் பெரும்பாலும் ஒத்து இருந்துள்ளது. ஆனால் கடந்த 20 / 30 ஆண்டுகளில் புதுவை மற்றும் விழுப்புரத்தின் மழை அளவு கடலூர் மழை அளவை ஒப்பிடும் போது அதீத வேறுபாடு காட்டுகிறது.

கடந்த நூற்றாண்டில் புதுவையின் மழை அளவு கடலூரில் பெய்யும் மழை அளவை காட்டிலும் பரவலாக அதிகமா இருந்துள்ளது ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் 5 முறை கடலுரை விட புதுவையில் மழை வடகிழக்கு பருவமழை காலங்களில் குறைந்து உள்ளது. இதன் பாதிப்பு புதுவையை உள்ளடக்கிய விழுப்புரம் மாவட்டதிலும் தெரிகிறது.

வடகிழக்கு பருவ மழை காலங்களில் கடலூர் மாவட்டத்தில் பெய்யும் மழை அளவை காட்டிலும் அருகிலேயே உள்ள விழுப்புரம் மற்றும் புதுவை மாவட்டங்களில் மழையின் அளவு கடந்த 20 / 30 ஆண்டுகளில் குறைந்து உள்ளது என்பது ஆய்வில் தெளிவாக தெரிகிறது.

பருவ நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக இந்த வேறுபாடு ஏற்பட்டுள்ளதா அல்லது புள்ளி விவரம் சேகரிக்கும் முறையில் வந்துள்ள மாறுதலின் காரணமாக வேறுபாடு ஏற்பட்டுள்ளதா என இந்தியா வானிலை துறை ஆராய வேண்டும் என இந்த பதிவின் வாயிலாக கோரிக்கை வைக்கிறோம்.